மரண தண்டனையை இரண்டு மாதங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 06-02-2019 | 5:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது, முறிகள் மோசடி, போதைப்பொருள் பிரச்சினை போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூறினார். மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறந்து பலர் செயற்பட்டதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அந்த காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்டவரே மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். மரண தண்டனை தொடர்பான தமது நிலைப்பாட்டையும் ஜனாதிபதி இன்று சபையில் தௌிவுபடுத்தினார். சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், மிகச்சிறிய நாடான இலங்கையில் அதனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் என்னவெனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான ஆவணங்களை கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் கோரி வருகின்ற போதிலும், அதனை வழங்குவதில் தாமதம் நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சரியான ஆவணங்கள் கடந்த ஜனவரி மாதத்திற்கானது மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், தான் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்ததன் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட பலரும் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவருக்கு மாத்திரமே தற்போது காணப்படும் ஆவணங்களின் படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, வௌிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தாம் விரும்பவில்லை எனவும் கூறினார். எவ்வாறாயினும், அடுத்த 2 மாதங்களில் மரணதண்டனையை அமல்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் ஊடாக எந்தளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் அதனை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நீதிபதிகளுக்கான பதவி உயர்வுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். 12 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக அவர்களின் பெயர்களை அரசியலமைப்பு பேரவைக்கு 2, 3 தடவைகள் சமர்ப்பித்த போதிலும், அவை நிராகரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனுபவம் வாய்ந்த அந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்காதமைக்கான காரணங்களையும் அரசியலமைப்பு பேரவை அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி கவலை வௌியிட்டார். பொலிஸ் அதிகாரம் தற்போது ஜனாதிபதியின் கீழ் இருப்பதனால், ஜனாதிபதி மீதான கொலை முயற்சி தொடர்பிலான விசாரணைகள் ஏன் நிறைவுபெறவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கும் இதன்போது ஜனாதிபதி பதிலளித்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நான்கு நாட்களுக்கு முன்னர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில்  சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.