அடிமை சாசனம் எழுத அரசாங்கம் முயல்கிறது

அடிமை சாசனம் எழுத அரசாங்கம் முயல்வதாக சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

by Staff Writer 06-02-2019 | 9:17 PM
Colombo (News 1st) புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பெயரில் அடிமை சாசனம் எழுதுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமலாக்குவதன் ஊடாக ஜனநாயகக் குரல்களை நசுக்கி ஒட்டுமொத்தமாக அடிமை சாசனத்தினை எழுதுவதற்குத் தயாராகும் பெரும்பான்மையின் நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டம் வலிந்து அமலாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புகள் வலுவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் சட்டத்தினை மாற்றி சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு புதிய சட்டத்தினை கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.