பிளட்டினம் விருது வழங்கல்: அதிசிறந்த பாடசாலைமட்ட வீராங்கனையாக நெத்மி மேகவர்ன தெரிவு

பிளட்டினம் விருது வழங்கல்: அதிசிறந்த பாடசாலைமட்ட வீராங்கனையாக நெத்மி மேகவர்ன தெரிவு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2019 | 1:47 pm

Colombo (News 1st) ஸ்போட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவுக்கான இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை மட்ட வீராங்கனையாக நெத்மி மேகவர்ன தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் நடாத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு விருது வழங்கல் விழாவான பிளட்டினம் விருது வழங்கல் விழா, அடுத்த மாதம் 29 ஆம் திகதி ரத்மலானை, ஸ்டெய்ன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

பிளட்டினம் விருது வழங்கல் விழாவுக்கான முன்னோடியாக இந்நாட்களில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஊக்குவிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்றைய நாளுக்கான செயற்றிட்டத்தின்போது, ஈழச்சமய வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கதிர்காமக் கந்தன் திருக்கோயிலில் ஸ்போட்ஸ் பெஸ்ட் குழாத்தினர் ஆசிகளையும் பெற்றுள்ளனர்.

அதனையடுத்து, இன்றைய 22 ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் ஹம்பாந்தோட்டை, தெபரவெவ தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அலியான்ஸ் நிறுவன அதிகாரிகள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கு, இலங்கையின் தரம் வாய்ந்த பயிற்றுநர்களால் றக்பி, பேஸ்போல் மற்றும் கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்தநிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிறந்த பாடசாலை வீரருக்கான வெண்கலப்பதக்கத்தை தெபரவெவ தேசிய பாடசாலையின் சதுர ஜெயநாத் வெற்றிகொண்டதோடு, சூரியவெவ தேசிய பாடசாலையின் வினாதி மல்ஷானி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

அதேநேரம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை மட்ட வீராங்கனைக்கான தங்கப்பதக்கம் தெபரவெவ தேசிய பாடசாலையின் நெத்மி மேகவர்ன வசமாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்