தேர்தலை நடாத்துமாறு மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்

வெனிசூலாவில் தேர்தலை நடாத்துமாறு மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்

by Staff Writer 05-02-2019 | 7:44 AM
Colombo (News 1st) வெனிசூலாவில் வெகுவிரைவில் தேர்தலை நடாத்துமாறு மேற்குலக நாடுகள், அந்நாட்டு இடைக்கால ஜனாதிபதி ஜூவான் குவைடோவை வலியுறுத்தியுள்ளன. அந்நாட்டின் பதில் ஜனாதிபதியாக ஜூவான் குவைடோவை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, பிரித்தானியா, போர்த்துக்கல், சுவீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், நியாயமானதும் சுதந்திரமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடாத்துமாறு மேற்குலக நாடுகள், ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு 8 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருந்தன. இந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, 20 க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் பதில் ஜனாதிபதியாக ஜூவான் குவைடோவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளும் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நிலையில், வெனிசூலாவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்பெயின் பிரதமர் கூறியுள்ளார்.