தமிழ் மக்கள் கூட்டணி எவ்வாறு வித்தியாசப்படுகிறது?

தமிழ் மக்கள் கூட்டணி எந்த அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது?

by Staff Writer 05-02-2019 | 10:12 PM
Colombo (News 1st) ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் கூட்டணி எந்த அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது என எழுப்பப்பட்ட ​வாராந்த கேள்விக்கு கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் பதிலளித்துள்ளார். தற்போதைய ஒற்றுமையானது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்துவிட்டிருப்பதாகவும் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த அதிகார மையம் இடப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் கேள்வியெழுப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரம் ஓரிடத்தில் தேங்கியதால் ஏற்பட்ட எதிர்மாறான விளைவை ஜே.ஆரின் காலத்திலும் எம்.ஆரின் காலத்திலும் காணக்கூடியதாக இருந்ததாகவும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்திலும் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிகாரம் மையப்படுத்தப்படுவதால் மக்களே பாதிக்கப்படுவதாகவும், ஜனநாயகம் ஒதுக்கி வைக்கப்படுவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி. வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு அப்பால் இருந்து அறிவுரை வழங்க சிவில் சமூக முக்கியஸ்தர்களை நியமித்துள்ளதாகவும், அவர்கள் நிர்வாகப் பிறழ்வுகள், ஊழல்கள், பிழையான கொள்கைகள், எதிர்கால அரசியல், பொருளாதார, சமூக அனர்த்தங்கள் பற்றிய அறிவுரைகளைத் தமக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் கால வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடவோ பிறழவிடவோ இந்த ஆலோசனை சபை இடங்கொடுக்காது எனவும் காலத்திற்கு காலம் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் கண்டறிந்து உள்வாங்க தமது கட்சி மக்கள் சக்தியாக இயங்குவதற்கு ஏதுவான கட்டமைப்பை அமைத்துள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அத்துடன், இருமொழி பரீட்சயம் கொண்டவர்களையே கட்சியின் வேட்பாளர்களாக இணைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒற்றுமையானது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டுமெனவும் சுயநலத்தை தவிர்த்து மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவதாக இருக்க வேண்டுமெனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் வாராந்த கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்