சகல மொத்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன

கொழும்பிலுள்ள சகல மொத்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன

by Staff Writer 05-02-2019 | 4:11 PM
Colombo (News 1st) சுங்க பணிப்பாளர் நாயகத்தை இடமாற்றுவது குறித்த அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு விரைவில் வழங்கப்படாத பட்சத்தில், தமது தொழிற்சங்க நடவடிக்கையை பணிப்பகிஷ்கரிப்பாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார். இந்நிலையில், கொழும்பிலுள்ள சகல மொத்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது. இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹேமக பெர்னாண்டோ இன்று முற்பகல் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து வௌியிட்டார்.
நாளாந்தம் சுமார் 600 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் சுங்கத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும். மக்களுக்கு தேவையான 16 அத்தியாவசியப் பொருட்களே இவ்வாறான கொள்கலன்களில் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், தொழிற்சங்க நடவடிக்கையின் போது, பழுதடையக்கூடிய கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. மூன்று நாட்களுக்குள் விடுவிக்கப்படாத பட்சத்தில் இதற்கான கட்டணம் துறைமுகத்தால் அறவிடப்படும். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும், சந்தைகளில் இனி விற்பனை செய்வதற்கு பொருட்கள் இல்லை.
என ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.