by Bella Dalima 05-02-2019 | 8:05 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையிலும், 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி அக்கரப்பத்தனையைச் சேர்ந்த சுப்பையா சத்தியேந்திரா இன்று பாராளுமன்ற வளாகத்திற்குச் சென்றிருந்தார்.
தமது உடலில் வேல்களைக் குத்திக்கொண்டும் தேசியக் கொடியை ஏந்தியவாறும் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசிக்கும் இடத்தில் பொலிஸார் சத்தியேந்திராவுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து, சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற சத்தியேந்திராவிடம் அங்கிருந்த அதிகாரியொருவர் மனுவை ஏற்றுக்கொண்டார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் 1000 ரூபா சம்பளம் வழங்கி இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கூட்டு ஒப்பந்தத்தை கட்டாயம் இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய சத்தியேந்திரா மக்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, கேகாலை - ருவன்வெல்ல நகரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ருவன்வெல்ல பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நவீன் திசாநாயக்க, கபீர் ஹாஷிம் ஆகியோர் வருகை தரவுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அக்கரப்பத்தனை - பெல்மோரல் மற்றும் பெல்மோரல் லோவர் கிரான்லி ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம - தலவாக்கலை பிரதான வீதியின் பெல்மோரல் சந்தியில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கறுப்புக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முச்சக்கர வண்டி சாரதிகள் தமது முச்சக்கர வண்டிகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டிருந்தனர்.
லிந்துலை நகரில் இன்று காலை 11 மணியளவில் அதிகளவிலான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஒப்பாரி வைத்து தப்பு அடித்து கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இதனால், தலவாக்கலை - நுவரெலியா மற்றும் தலவாக்கலை - டயகம பிரதான வீதிகளூடான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டது.
1000 ரூபா சம்பள உயர்வு கோரி மஸ்கெலியா - குயின்ஸ்லான்ட் தோட்டத்தொழிலாளர்களும் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.