அடிப்படை உரிமை மனுவிலிருந்து காமினி செனரத் வாபஸ்

அடிப்படை உரிமை மனுவிலிருந்து காமினி செனரத் வாபஸ்

by Staff Writer 05-02-2019 | 1:52 PM
Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காமினி செனரத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெற்றுள்ளார். தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என உத்தரவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. காமினி செனரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இது குறித்து கோரிக்கை முன்வைத்தனர். எனினும், இந்தக் கோரிக்கைய நிராகரித்து, வழக்கினை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்தது. எதிர்காலத் தேவை கருதி, மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை தாம் வைத்துக்கொண்டு தற்போதைய மனுவை வாபஸ் பெறுவதாக காமினி செனரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இன்று உயர்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். சிசிர டி ஆப்ரூ, புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் காமினி செனரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.