மாலியில் பலியான இராணுவத்தினரின் உடல்கள் கையளிப்பு

மாலியில் உயிர்நீத்த இலங்கை இராணுவ வீரர்களின் உடல்கள் கையளிப்பு

by Staff Writer 04-02-2019 | 5:22 PM
Colombo (News 1st) மாலியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல்களும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பூதவுடல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எம்.பீ. ருவன் விஜயவர்தன ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி அதிகாலையில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையுடன் இணைந்த வகையில் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பயணித்த WMZ வகையிலான கவச வாகனமொன்று மாலியின் டுவன்சா பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இந்த குண்டுத் தாக்குதலில் கெப்டன் எம்.டபிள்யூ.டீ. ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகியோர் உயிர்நீத்தனர். அத்துடன், குறித்த அனர்த்தத்தில் மேலும் இலங்கை இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.