சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி - ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

by Fazlullah Mubarak 04-02-2019 | 1:54 PM

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் தமது வாழ்த்து செய்தியினை வௌியிட்டுள்ளனர்.

இலங்கை அடைந்த சுதந்திரத்தின் உயரிய அர்த்தத்தினை அடைவதற்காக புதிய நோக்குடனும், புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இந்த தருணத்தில் அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்கால சுபீட்சம் நிமித்தம் தேசியத்துவத்தால் உயிரூட்டப்பட்ட ஆன்மாக்களை கொண்ட மனிதர்களே அபிவிருத்திக்கான தேவையாக அமைவதாகவும் ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாடு என்ற வகையில், நாம் எதிர்பார்ப்பது அவர்களுடனான சகலவிதமான பிணைப்புகளிலிருந்தும் விடுபட்ட சுய அடையாளங்களை கொண்ட அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான முன்னோக்கிய பயணமாகும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் அத்திவாரமாக கமத்தொழிலை மீ்ண்டும் நிலைநாட்ட வேண்டிய காலம் மலந்துள்ளதை இந்நாளில் வலியுறுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முன்னேற்றத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் பொது எதிரியாகிய வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திரம் மிகவும் அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமாயின், நாட்டில் மக்கள் சமூகமொன்றில் மனிதனை போன்றே பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் என அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனை வெறுமனே கொண்டாட்டம் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பிரதமர், முறையான திட்டமிடலும் கூட்டு அர்ப்பணிப்பும் அத்தியவசியமானது என பிரதமர் தனது தேசிய தின வாழ்த்து செய்தில் குறிப்பிட்டுள்ளார். 71 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னேற்றகரமான சமூக அரசியல் சூழலொன்றின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்கு பலமான பொருளாதாரம், நிலையான அரசு, வளமான தேசத்தை உருவாக ஒன்றிணைந்து செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எமது நாட்டை பிரித்தாள எத்தனிக்கும் சுய நோக்குள்ள வௌிநாட்டு சக்திகளுக்கு இடங்கொடுத்திராத, தேசமாக எமது இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.