போதைப்பொருள் பாவனை, மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

by Bella Dalima 02-02-2019 | 8:15 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அண்மையில் பாடசாலை மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து பொலிஸ் நிலையம் வரை பயணித்தது. கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் பொலிஸாரிடம் கையளித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கிளிநொச்சியில் மாணவரை அச்சுறுத்தியமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து, அதனுடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்துள்ளனர். குறித்த மாணவர் சைக்கிளில் சென்ற சந்தர்ப்பத்தில், மற்றுமொரு சைக்கிள் குறுக்காக சென்றமையால் மாணவர் வீழ்ந்துள்ளார். இதுவே சம்பவம். தாக்குதல் தொடர்பில் பதிவாகவில்லை. நான் அது தொடர்பில் ஆராய்ந்தேன். அது கஞ்சா தொடர்பான பிரச்சினையொன்று அல்ல. பாடசாலையின் விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தயாரான சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும். அதனை கல்விசார் அதிகாரிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
என தெரிவித்தார்.