தொழிற்சங்க  நடவடிக்கையால்  கொள்கலன்கள்  தேங்கல்

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால்  தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்

by Staff Writer 02-02-2019 | 4:30 PM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையால் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக சுங்க அலுவலக அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய நாட்களில் நாளாந்தம் 2000 கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போது அந்த பரிசோதனை நடவடிக்கைகள் 100 கொள்கலன்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டார். கடந்த புதன்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். சுங்க பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட P.S.M. சார்ள்ஸை நிதி அமைச்சின் வருமான கண்காணிப்பு பிரிவிற்கு மாற்றி, கடற்படையின் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் ஷமல் பெர்னாண்டோவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அண்மையில் சமர்ப்பித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்படி வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை சுங்க அதிகாரிகள் ஆரம்பித்தனர். பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிப்பது அமைச்சரவையின் செயற்பாடு என நிதி அமைச்சு கூறுகின்றது. இதன் காரணமாக சேவைக்கு மீண்டும் திரும்புமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அலுவலக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டார்.