காயத்துடன் வௌியேறினார் திமுத் கருணாரத்ன

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: காயத்துடன் வௌியேறினார் திமுத் கருணாரத்ன

by Staff Writer 02-02-2019 | 7:41 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: காயத்துடன் வௌியேறினார் திமுத் கருணாரத்ன அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாளில் பந்து தலையில் பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திமுத் கருணாரத்ன சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது. இதேவேளை, அவுஸ்திரேலியா பெற்ற 534 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட ​நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கென்பரா மெனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. 172 ஓட்டங்களுடன் களமிறங்கிய ஜோ பேர்ன்ஸ் மேலதிகமாக 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 180 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேர்டிஸ் பெட்டிர்சன், டெஸ்ட் கன்னி சதத்தை எட்டிய நிலையில் 114 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 534 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது. விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்னே ஜோடி முதல் விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, பெட் கம்மிங்ஸ் வீசிய பந்து திமுத் கருணாரத்னவின் தலையில் பட்டது. இதனால் அவர் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். லஹிரு திரிமன்னே 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க , அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். பெட் கம்மிங்ஸின் பந்துவீச்சில் குசல் மென்டிஸ் போல்டானார்.