சட்டவிரோத கேபள் இணைப்பு குறித்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோத கேபள் இணைப்பு குறித்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோத கேபள் இணைப்பு குறித்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2019 | 8:55 pm

Colombo (News 1st) சட்டவிரோத கேபள் இணைப்பு தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக, யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (11) நடைபெற்றது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று கேபள் இணைப்புகளை வழங்குவதற்காக கம்பங்களை நாட்டியமைக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகர சபையின் அனுமதியின்றி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கம்பங்களை அகற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியமைக்கமைய, மாநகர சபையால் கம்பங்கள் அகற்றப்பட்டன.

கேபள் இணைப்பிற்கான கம்பங்கள் அகற்றப்பட்டமை சட்டவிரோதமானது என யாழ். மேல் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் இன்று ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டாத நிலையில், நீதவான் விசாரணைகளை நிறைவுசெய்ததாகவும் மனுதாரர்கள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை முதல்வர், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.