வனப் பாதுகாப்பு தொடர்பான சவால் சாதாரண விடயமல்ல

வனப் பாதுகாப்பு தொடர்பான சவால் சாதாரண விடயமல்ல - ஜனாதிபதி

by Staff Writer 31-01-2019 | 1:09 PM
Colombo (News 1st) வனப் பாதுகாப்பு தொடர்பான சவாலை சாதாரணமான விடயமாகக் கருதமுடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றாடலுக்கான ஜனாதிபதி விருது வழங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எமது நாட்டில் 28 வீதமான வன அடர்த்தி காணப்படுகின்றது. 38 வீதமாக அதிகரிப்பதற்கு 2 வருடங்களாக நடவடிக்கை எடுத்துவருகின்றோம். ஆனால், ஒரு வருடத்திற்கு 1.5 வன அடர்த்தி குறைவடைகின்றது. தற்போது 28 வீதம் தான் காணப்படுகின்றது. இவ்வாறு ஒரு வருடத்திற்கு 1.5 வீதமாக வன அடர்த்தி குறைவடைந்தால் இந்த 28 வீதம் குறைவடைவதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும்? இது தொடர்பில் சூழலை மாசுபடுத்துபர்களுக்கு எவ்வளவு கூறினாலும் பயனில்லை. மரம் வெட்டுபவர்கள், காடழிப்பவர்கள், மணல் அகழ்பவர்களுக்குக் கூறுவதால் பயனில்லை. மணல், கல் அபிவிருத்திப் பணிகளுக்காக அகழ விடுவதில்லை என்பது என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. பதக்கம் வென்றுள்ள மாவட்டத்திலுள்ள மாணவர்கள் தவிர்ந்த ஏணைய மாவட்டங்களுக்கு இந்த வேலைத்திட்டம் சென்றடையவில்லை. இதற்கு கல்வி அமைச்சை விட மத்திய சுற்றாடல் அதிகாரசபையே பொறுப்புக் கூற வேண்டும்
என இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.