படைப்புழு தாக்கம்:விலங்குகளுக்கான உணவு தட்டுப்பாடு

படைப்புழுவின் தாக்கத்தால் விலங்குகளுக்கான உணவில் தட்டுப்பாடு

by Staff Writer 31-01-2019 | 1:28 PM
Colombo (News 1st) படைப்புழு தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விலங்குகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச கால்நடை வைத்தியசங்கம் தெரிவித்துள்ளது . விலங்குகளுக்கான உணவு உற்பத்திற்கு பிரதானமாக சோளம் பயன்படுத்தப்படுவதாக, அரச கால்நடை வைத்தியசங்கத்தின் தலைவர் டொக்டர் ருவன் விக்ரமஆரச்சி குறிப்பிட்டுள்ளார். எனினும், படைப்புழுவின் தாக்கத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோளப் பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மாரவில பகுதியில் கால்நடைப் பண்ணைக்கு கொண்டுவந்த சோளத்தில் அடையாளம் காணப்படாத விதையும் காணப்பட்டதாகவும் டொக்டர் ருவன் விக்ரமஆரச்சி தெரிவித்துள்ளார். இதனைக் கண்டுபிடிப்பதற்காக தேசிய கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் பண்ணைக்கு சென்றுள்ளனர். குறித்த விதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் அவை படைப்புழு அல்ல என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விதையில் கண்டுபிடிக்கப்பட்ட புழு தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுப்பதற்காக அவை அதிகாரிகளினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இந்தநிலையில், விவசாய அமைச்சு, நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுக்கும் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தெளிவூட்டும் செயற்றிட்டம் மொனராகலை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.