கிண்ணியாவில் உயிரிழந்த இளைஞரின் ஜனாஸா நல்லடக்கம்

கிண்ணியா சுற்றிவளைப்பு: உயிரிழந்த மற்றைய இளைஞரின் ஜனாஸா நல்லடக்கம்

by Staff Writer 31-01-2019 | 8:36 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த மற்றைய இளைஞரின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கிண்ணியா - கண்டல்காடு பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் குதித்து காணாமற்போயிருந்த இந்த இளைஞரின் ஜனாஸா நேற்று (30) மீட்கப்பட்டது. கிண்ணியா - இடிமன் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பசீர் ரமீஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். கிண்ணியா பொது மையவாடியில் இன்று மதியம் 12 மணியளவில் அவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் நேற்று முன்தினம் (29) சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இதன்போது, மூவர் கங்கையில் குதித்ததுடன் அவர்களில் ஒருவர் தப்பினார். ஏனைய இருவர் காணாமற்போயிருந்தனர். காணாமற்போன இருவரில் ஒருவரின் ஜனாஸா நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. 23 வயதான வதூர் ரபீக் பரீஸ் என்ற இளைஞரின் ஜனாஸா நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை, கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.