கிண்ணியா அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் பதிவு

கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 31-01-2019 | 7:12 AM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா, கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரக் கைதுசெய்வதற்காக கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், 7 கடற்படை உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அமைதியின்போது, கையடக்கத்தொலைபேசியூடாக பதிவுசெய்யப்பட்ட காணொளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அமைதியின்மையின்போது, எதிர்த்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கற்பிரயோகத்தில் படுகாயமடைந்த இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் கொழும்பு கடற்படையின் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 3 உத்தியோகத்தர்கள் திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைளை் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, கிண்ணியா - கண்டல்காடு பாலத்திற்கு அருகில் மகாவலிகங்கையில் பாய்ந்து காணாமற்போயிருந்த மற்றுமொரு இளைஞனின் சடலமும் நேற்று மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் நேற்று முன்தினம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது மூவர் கங்கையில் பாய்ந்ததுடன் அவர்களில் ஒருவர் தப்பியதுடன், இருவர் காணாமற்போயிருந்தனர். காணாமற்போன இருவரில் ஒருவரின் சடலம் நேற்று தினம் மாலை மீட்கப்பட்டதுடன், மற்றையவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில், 19 வயதான பசீர் ரமீஸின் சடலமும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.