மாணவி வித்தியா கொலை வழக்கில் நீதவான் உத்தரவு

மாணவி வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 30-01-2019 | 1:12 PM
Colombo (News 1st) யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில் இன்று (30) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர். வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக அறிக்கை தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்தார். இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை இலக்கமானது, வித்தியா படுகொலை தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கின் இலக்கம் என தெரிவித்து இந்த ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் சரியான தகவலை மன்றுக்குத் தெளிவுபடுத்துமாறும் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.