by Staff Writer 30-01-2019 | 8:57 PM
Colombo (News 1st) தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை வீர, வீராங்கனைகளை கௌரவிப்பதற்காக ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் மற்றும் Allianz நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்புத் திட்டம் பதுளையில் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்புத் திட்டம் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமானது.
கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் Allianz நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
தென் கொரியாவில் இருந்து வருகைதந்துள்ள டைகொண்டோ குழுவினர் நிகழ்வொன்றை நடத்தியதுடன், பேஸ் போல் கால்பந்தாட்டம் மற்றும் ரக்பி விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்காக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பதுளை மாவட்டத்தின் திறமையான வீரருக்கான பிளாட்டினம் தங்க விருதை, இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியின் அம்பெய்தல் வீரர் ரவீன் கவீஷ பெற்றுக்கொண்டார்.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் சுடரேந்திய வாகன பவனி பதுளையில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
சுடர் பவனி ஹாலிஎல மற்றும் சீதாஎலிய ஊடாக நுவரெலியாவை இன்று சென்றடைந்தது.
பிளாட்டினம் விருது வழங்கல் விழா ஊக்குவிப்புத் திட்டம் நுவரெலியாவை கேந்திரமாகக் கொண்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.