படைப்புழுவைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ் இறக்குமதி

படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட வைரஸ் இறக்குமதி

by Staff Writer 30-01-2019 | 7:08 AM
Colombo (News 1st) படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகை விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த வைர​ஸை விவசாயத் துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். வெலிகமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மூலம் படைப்புழுவை அழிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைப்புழுவினை அழிக்கக்கூடிய 4 வகையான பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எஸ்.எஸ். வெலிகமகே மேலும் தெரிவித்துள்ளார். குறித்த பூச்சிகளைப் பயன்படுத்தி படைப்புழுவை அழிப்பது தொடர்பிலான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். வெலிகமகே சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, படைப்புழுக்களால் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் கண்டறிவதற்காக விவசாய அமைச்சின் ஒத்துழைப்புடன் நியூஸ்பெஸ்ட், மக்கள் சக்தி முன்னெடுக்கும் தௌிவூட்டும் செயற்றிட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மொனராகலை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. விவசாய அமைச்சின் ஒத்துழைப்புடன, பேராதெனிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.