அமெரிக்க குடியுரிமையை நீக்க கோட்டாபய நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள கோட்டாபய நடவடிக்கை

by Staff Writer 30-01-2019 | 5:59 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களைத் தயார்ப்படுத்தி வருவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விரைவில் தனது அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகிவிட்டதாகவும் அவர் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். அதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவற்றை நம்பாமல் தனக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தனது செவ்வியில் கூறியுள்ளார். தனக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்ததாக வீரகேசரி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான செயற்பாடுகள் மற்றும் நகர்வுகள் பெரும்பாலும் பூர்த்தியாகிவிட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு தலைமை வகித்ததால் தன்னைப்பற்றி தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் சிலர் முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் மீட்பதற்காகவே தான் போராடியதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.