கிண்ணியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல்

கிண்ணியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல்

by Staff Writer 30-01-2019 | 6:52 AM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிண்ணியா - கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்று மாலை கடற்படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, காயமடைந்த 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டிணன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். அவர்களில் நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் கிண்ணியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் மூவர் ஆற்றில் பாய்ந்து தப்பியோடிய நிலையில், ஒருவர் மீட்கப்பட்டிருந்தார். அதேநேரம், ஆற்றில் குதித்து காணாமற்போனவர்களில் 22 வயதான இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. மற்றுமொருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, மணல் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.