அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட கோபங்கள் இல்லை: யோஷித்த ராஜபக்ஸ

by Bella Dalima 30-01-2019 | 8:16 PM
Colombo (News 1st)  யோஷித்த ராஜபக்ஸ இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கொன்றில் ஆஜராவதற்காக சென்றிருந்தார். இதன்போது, அண்மையில் ராஜபக்‌ஸ குடும்பத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கட்சி வேறுபாடின்றி சகலரும் கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் யோஷித்த ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசியல் ரீதியில் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட கோபங்கள் இல்லை என்பதால், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் பதிலளித்தார். கல்கிசை - மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பிலான வழக்கின் முதலாவது சந்தேகநபர்களான டெய்சி ஃபோரஸ்ட் மற்றும் யோஷித்த ராஜபக்ஸ ஆகியோர் இன்று கல்கிசை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜராகினர். இதன்போது, பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், தனியார் வங்கியொன்றில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறை கூட்டுக்கணக்கு தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தது. அந்த வங்கி அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.