நாலக்க டி சில்வாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நாலக்க டி சில்வாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 30-01-2019 | 1:04 PM
Colombo (News 1st) ஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட அனைத்து குரல்பதிவுகளும் அடங்கிய 14 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தை, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் இன்று (30) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த ஆவணம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜை மர்சலி தோமஸ் ஆகியோர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்குடன் தொடர்புடைய இந்தியப் பிரஜை தமது வீட்டிற்கு வருகை தந்ததாக சஷி வீரவங்ச, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விடயம் தொடர்பில் சஷி வீரவங்சவிடம் 3 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, சஷி வீரவங்சவிற்கு அச்சுறுத்தல் ஒன்று காணப்படுவதாக இந்தியப் பிரஜை தெரிவித்ததாக அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த இந்தியப் பிரஜை தன்னை சந்தித்துள்ளாரா என்பது தொடர்பில் தனக்கு நினைவில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்