கிண்ணியா சுற்றிவளைப்பு: காணாமற்போயிருந்த மற்றுமொரு இளைஞரின் சடலம் மீட்பு 

கிண்ணியா சுற்றிவளைப்பு: காணாமற்போயிருந்த மற்றுமொரு இளைஞரின் சடலம் மீட்பு 

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2019 | 8:26 pm

Colombo (News 1st)  திருகோணமலை – கிண்ணியா, கண்டல்காடு பாலம் அருகில் மகாவலி கங்கையில் குதித்து காணாமற்போயிருந்த மற்றுமொரு இளைஞரின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்காக கடற்படையினர் நேற்று (29) சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, மூவர் கங்கையில் குதித்தனர். அவர்களில் ஒருவர் தப்பியதுடன், இருவர் காணாமற்போயிருந்தனர்.

காணாமற்போன இருவரில் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. இந்நிலையில், மற்றையவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் 19 வயதான பசீர் ரமீஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் கூலித்தொழிலாளிகள் எனவும் அவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் வலியுறுத்தினர்.

இதேவேளை, நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட 23 வயதான வதூர் ரஃபீக் பரீஸின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலையில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் இடைநிறுத்தியுள்ளதாகவும் அவற்றை மீள வழங்குவதுடன், சட்டவிரோத அகழ்வில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் அகழ்வுப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் D. சஞ்சன டி சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்