பம்பைமடுவில் தொடர் ஆர்ப்பாட்டம்

பம்பைமடுவில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 29-01-2019 | 10:36 PM
Colombo (News 1st) வவுனியா - பம்பைமடுவில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாளம்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று காலை முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். குப்பை கொட்ட வருகை தந்த வவுனியா நகர சபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையின் வாகனங்களை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, சேகரிக்கப்பட்ட குப்பைகளுடனும் கழிவகற்றும் வாகனங்களுடனும் வவுனியா நகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து நகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. எனினும், இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் நகர சபையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. உரிய தீர்வை நீதிமன்றத்தினூடாகப் பெற்றுத்தருவதாக பொலிஸார் தெரிவித்தமையைத் தொடர்ந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி நகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் பம்பைமடு பகுதிக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.தினேஸ்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் சென்று கலந்துரையாடியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத்தருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். எனினும், தீர்வு கிட்டும் வரை பம்பைமடுவில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் கைவிடப்படாது என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.​ே குறித்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.