சுமந்திரன் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா?

by Staff Writer 29-01-2019 | 9:07 PM
Colombo (News 1st) கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட குழு அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என குறித்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். இந்த அறிக்கை கடந்த 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் இந்த மோதல் தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறியின் தலைமையிலான குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை​ BBC சிங்கள சேவை அண்மையில் வௌிப்படுத்தியிருந்தது. இந்த வௌிக்கொணர்விற்கு அமைய, கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்களின் ​ போது 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் சரத்துக்களை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதில் 54 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்பதுடன், நால்வர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆவர். மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினர் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாக குறித்த குழு அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தின் கூற்றுக்கமைய, நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தலையீடு செய்தமைக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த மோதல் எவ்வாறு உருவானது? 135 ஆவது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய, நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரத்தை சவாலுக்குட்படுத்தவில்லை. எனினும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அல்லாத வேறு ஒரு உறுப்பினர் அத்தகைய பிரேரணை ஒன்றை முன் வைத்தால் 20-இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதனை சபையில் அங்கீகரிக்க வேண்டும் என 135 ஆவது நிலையியற்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுத்திப்படுத்தும் வகையில் நவம்பர் 14 ஆம் திகதி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதா? நிலையியல் கட்டளைகளின் இடைநிறுத்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சபையில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பில் பாராளுமன்ற குழு அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தமது விசாரணைகளின் போது கவனம் செலுத்தியதா? மூத்த பாராளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மிகவும் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்துவதற்கான பிரேணையை முன் வைத்த போது எம்.ஏ.சுமந்திரன் அதனைத் தடுக்கும் வகையில் தலையீடு செய்தார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முன்னின்று இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தாம் இழக்க நேரிட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அங்கலாய்கின்றன. பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் வகையில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் அல்லவா? பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் அக்ராசனத்திற்கு அருகில் சென்றமை விசாரணைக்கு வித்திட்டது என்றால், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் செயற்பட்ட விதமும் விசாரணைக்கு உரியது அல்லவா ?