ஆப்கன் பிரஜை தொடர்பில் திடுக்கிடும் தகவல்

கொள்ளுப்பிட்டியில் கைதான ஆப்கன் பிரஜை தொடர்பில் திடுக்கிடும் தகவல்

by Staff Writer 29-01-2019 | 7:05 AM
Colombo (News 1st) கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் நடைபெற்று வந்த போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்டொர் இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆப்கன் பிரஜை பிரதான சந்தையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். இதேவேளை, இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலருக்கு இந்த ஆப்கன் பிரஜை போதைப்பொருள் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இதன்போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்வனவிற்காக இவர்களிடம் ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையைத் தடுப்பதற்காக சிறப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 2 வாரங்களில் அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்வதற்கு கடந்த வாரம் 1984 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையில் 60ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையில் 800 கிரோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பில் 5,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் வௌிநாட்டுப் பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.