திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

விசேட திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

by Staff Writer 28-01-2019 | 8:33 PM
Colombo (News 1st) 'போதைப்பொருள் அற்ற நாடு' என்ற நோக்கத்தை சாத்தியமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் விசேட திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் இன்று (28) கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இந்த கௌரவிப்பு விழா இடம்பெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் திறம்பட பங்களிப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய 1,034 பொலிஸ் அதிகாரிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இந்தப் பரிசுகள் 3 பிரிவுகளில் வழங்கப்பட்டதுடன், 15 பேருக்கு பொலிஸ் வீரர் ஜனாதிபதி பதக்கமும் 59 பேருக்கு பொலிஸ் திறமை பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கும்போது, அதற்கான காரணத்தை கடிதத்தில் உள்ளடக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.