by Staff Writer 28-01-2019 | 4:57 PM
Colombo (News 1st)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இம்முறை அலரிமாளிகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் இம்முறையும் நீண்ட இழுபறிக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் கடந்த வருடம் ஒக்டோபர் காலாவதியானது.
இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் கைகூடவில்லை.
குறித்த காலப் பகுதியில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது அடிப்படை சம்பளத்தை 700 ரூபா வரை அதிகரித்து புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த முடிவை ஏற்க முடியாது என தெரிவித்து தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், இன்று அலரிமாளிகையில் புதிய ஒப்பந்தத்தில் இரண்டு தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் கையொப்பமிட்டன.
தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தரற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீர, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற மூன்றாவது தரப்பான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை.
புதிய ஒப்பந்தத்தின்படி, அடிப்படை சம்பளம் 700 ரூபாவாகவும் மேலதிக கொழுந்து ஒரு கிலோகிராமுக்கான கொடுப்பனவு 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பாக 105 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த பல சலுகைகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளம் 500 ரூபாவாகவும், நிலையான கொடுப்பனவு 30 ரூபாவாகவும். வரவுக்கான கொடுப்பனவாக 60 ரூபாவாகவும் உற்பத்திக்கான கொடுப்பனவு 140 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிவற்றுக்கான பங்களிப்பாக 75 ரூபாவாக அமைந்திருந்தது.
இதன் பிரகாரம் இரண்டு ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த சம்பளத்தின் வேறுபாடு 50 ரூபா மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அந்தத் தொகை எந்தளவு காலத்திற்கு எவ்வாறு வழங்கப்படும் என்ற விபரம் இதுவரை உறுதியாக அறிவிக்கப்வடவில்லை.
கடந்த முறையும் தொழிலாளர்களால் நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாமற்போனமை குறிப்பிடத்தக்கது.