by Staff Writer 27-01-2019 | 2:46 PM
Colombo (News 1st) நாட்டில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு முன்னெடுக்கபடும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்திற்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்காக கடந்த 4 வருடங்களாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த வருடத்தில் மேலும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பு, கோட்டை - காங்கேசன்துறை வரையான உத்தரதேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியின் வெள்ளோட்டம் இன்று முன்னெடுக்கபட்டது.
இன்று காலை கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் வண்டி புறப்பட்டு சென்றதுடன், இந்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்த நிகழ்விற்கு இணையாக, இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான துண்டு பிரசுரங்களை விநியோக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் அடங்குகின்ற மக்களிடம் இன்று கையளிக்கப்பட்ட ரயிலில் 724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்க முடியும்
ரயில் வண்டியில் யாழ் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.