தொழிலாளர்களுக்கான சம்பள சூத்திரம் மோசடியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள சூத்திரம் மோசடியானது: மக்கள் தொழிலாளர் சங்கம்

by Staff Writer 26-01-2019 | 4:43 PM
Colombo (News 1st) 700 ரூபா சம்பள அதிகரிப்பை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால், மக்கள் தொழிலாளர் சங்கம் இதற்கு எதிராகக் கண்டனம் வௌியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு கூடி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த கபடத்தனமான முன்மொழிவுகளுக்கு இசைந்து தொழிலாளர்களை ஏமாற்றலாம் என நினைத்து, தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடுவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை பாரிய வரலாற்று துரோகத்தை இழைப்பதாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கையெழுத்திடக்கூடாது எனவும் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பள சூத்திரம் மோசடியானதொன்று என மக்கள் தொழிலாளர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் மேலதிக கொழுந்திற்கான கொடுப்பனவு என்பன நாட்சம்பளத்தில் அடங்குபவை அல்லவென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் நியதிச்சட்ட கொடுப்பனவு எனவும் ஓய்வூதியக் கொடுப்பனவு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவற்றை சம்பளத்துடன் இணைத்துக்கூறுவது வேடிக்கையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதற்கு எவ்வாறு இணங்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தினர், இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவார்களாயின் அது மலையக வரலாற்றின் முதல் துரோகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மொத்த சம்பளம் 855 ரூபாவென்ற மாயையை ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் முயற்சிப்பதாகவும் மக்கள் தொழிலாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. நேற்றைய தினம் (25) நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமானது, கடந்த கூட்டு ஒப்பந்தத்திலிருந்து 30 ரூபா அதிகரிப்பை மாத்திரமே காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை கோரும் நிலையில், வெறும் 700 ரூபா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.