பாராளுமன்ற மோதல்: விசாரணை அறிக்கையில் 59 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

by Staff Writer 26-01-2019 | 7:18 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பில் 59 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தை தாம் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தி BBC இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த மூன்று நாட்களிலும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அங்கு பொருத்தப்பட்டுள்ள கெமராக்களிலிருந்தும் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த இலத்திரனியல் ஊடகங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டு செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை அவதானித்த பின்னர் விசாரணைக்குழு தமது அறிக்கையை கையளித்துள்ளது. இதற்கமைய, 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் சரத்துக்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 54 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரொருவரின் பெயர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள 59 உறுப்பினர்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவின் பெயரே அதிகத் தடவைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது. அக்ராசனத்தின் மீது நீர் ஊற்றியமை, பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை மற்றும் பொலிஸார் மீது ஒருவித திரவத்தை விசிறியமை உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சபாநாயர் மீது நீர் விசிறியமை, குப்பை வாளியை வீசியமை மற்றும் புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இந்திக்க அனுருத்த மீது சுமத்தப்பட்டுள்ளன. சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்திய குற்றச்சாட்டை, பாராளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுணுகமவும் ஆனந்த அளுத்கமகேவும் எதிர்கொண்டுள்ளனர். சபாநாயகர் மீது தண்ணீர் போத்தலை வீசியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கத்தியைப் போன்ற ஏதேனுமொன்றை கையில் வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அக்ராசனத்தில் அமர்ந்த குற்றச்சாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இலக்காகியுள்ளார். சபாநாயகரின் மேசை மீதிருந்த ஒலிவாங்கியை சேதப்படுத்தியமை, பொலிஸ் அதிகாரிகளிருந்த திசை நோக்கி கதிரையை வீசியமை, புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்நோக்கியுள்ளார். பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. செங்கோல் வைக்கப்படும் மேசையைக் கவிழ்த்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஷாந்த முத்துஹெட்டிகமவும் ரஞ்சித் சொய்சாவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். தமது பாதணியில் ஏதேவொன்றைக் கொண்டுவந்து தண்ணீர் பாத்திரத்தில் கலந்தமை, காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருந்த திசை நோக்கி திரவத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களிலும் ஏற்பட்ட சொத்து சேதம், வரி நீங்கலாக மூன்று இலட்சத்து 25ஆயிரம் ரூபா என மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு சபாநாயகருக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவினால் கடந்த வியாழக்கிழமை (24) சபாநாயகருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ரஞ்சித் மத்துமபண்டார, சமல் ராஜபக்ஸ, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்நாயக்க மற்றும் மாவை சேனாதிராசா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். எனினும், ஐக்கிய மக்கள் சுமந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சமல் ராஜபக்ஸ மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் இந்தக் குழுவிற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை. பாராளுமன்ற நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி சபை அமர்வை முன்னெடுப்பதற்கு எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணையே இவை அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்தது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு அருகில் சென்று, எம்.ஏ.சுமந்திரன் விரல் நீட்டி அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை முழு நாடும் பார்த்தது. சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா?