83 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவுள்ளனர்

தமிழகத்திலிருந்து 83 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவுள்ளனர்

by Staff Writer 26-01-2019 | 4:12 PM
Colombo (News 1st) யுத்த காலத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த 83 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 31 ஆம் திகதி 39 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. UL - 38, UL - 132 மற்றும் UL - 122 ஆகிய விமானங்களில் இவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி அறிக்கை ஒன்றினூடாகக் கூறியுள்ளார். 34 ஆண்களும் 49 பெண்களும் நாடு திரும்பவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை, யுத்த காலத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் சுமார் 65,000 பேர் அகதி முகாம்களிலும் 35,000 பேர் வௌியிடங்களிலும் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி சுட்டிக்காட்டியுள்ளார்.