மத்திய வங்கியின் நந்தலால் வீரசிங்க , ஆனந்த சில்வாவை முறிகள் மோசடி சந்தேகநபர்களாக பெயரிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் கோரிக்கை

by Staff Writer 24-01-2019 | 7:38 PM
Colombo (News 1st) மத்திய வங்கி அதிகாரியொருவருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரியொருவருக்கும் எதிராக முறிகள் மோசடி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணி சஜித் ஜயவர்தன நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் சந்தலால் வீரசிங்க மற்றும் ஓய்வு பெற்ற பிரதி ஆளுநர் ஆனந்த சில்வா ஆகியோரை சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு நகர்த்தல் பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த இரு அதிகாரிகளில் ஒருவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் அலோசியஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஜித்த ஜயவர்தன மன்றுக்கு அறிவித்தார். அந்த இரு அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்காமை, நீதி நிலைநாட்டப்படும் செயற்பாட்டினை மீறும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணி குறிப்பிட்ட விடயங்கள் விசாரணைகளுடன் தொடர்புபட்டவை என்பதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மன்றில் ஆஜராகும் சந்தர்ப்பத்தில், அந்த விடயங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பெப்ரவரி 25 ஆம் திகதி அந்த விடயங்களை மன்றில் தெரிவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.