தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 24-01-2019 | 8:09 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு கோரி இன்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வெலிமடை - கொழுந்து மடுவத்திற்கு அருகில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி வெலிமடை தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர். இதேவேளை, நாவலப்பிட்டி - கொலபத்தனவில் 3 தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 2 மணித்தியாலங்களாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதுடன், கொலபத்தனவிலிருந்து தலப்பத்தன வரை கவனயீர்ப்புப் பேரணியும் நடத்தப்பட்டது. நாவலப்பிட்டி - கொலபத்தன வீதியூடாக தலப்பத்தன வீதி வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-இற்க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் கலந்து கொண்டனர். இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.