கொள்ளுப்பிட்டி ஹெரோயின் சம்பவத்தில் திருப்பம்

கொள்ளுப்பிட்டியில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் புதிய தகவல்

by Staff Writer 24-01-2019 | 6:59 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் தொடர்புடைய கடத்தல் நடவடிக்கைகள் டர்க்மேனிஸ்தானில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. குறித்த கடத்தலில் முக்கியஸ்தர்களாக செயற்பட்ட டர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 90 கிலோகிராமுக்கும் அதிக ​ஹெரோயினுடன் நேற்று முன்தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் குறித்த ​ஹெரோயின் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக, விசாரணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஹெரோயின் கடத்தல் நடவடிக்கை 2016 ஆம் ஆண்டிலிருந்து மிக சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்க பிரஜைகள் இருவரும் அடங்குகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என விசாரணைப் பிரிவினர் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஏனைய செய்திகள்