குறைந்தளவான உரிமைகளைப் பெறவே முயன்றுள்ளனர்

குறைந்தளவான உரிமைகளைப் பெறவே தமிழ் தலைவர்கள் முயன்றுள்ளனர்: சி.வி.விக்னேஷ்வரன்

by Staff Writer 24-01-2019 | 5:30 PM
Colombo (News 1st) மிகவும் குறைந்தளவான சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ் தலைவர்கள் முயன்றுள்ளமையை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கமைப்பாளருமான ஃபேர்கஸ் அவுல்டை (Fergus Auld) இன்று சந்தித்த போதே சி.வி.விக்னேஷ்வரன் இதனைக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். புதிய கட்சி ஆரம்பித்தமைக்கான காரணம் என்னவென பிரித்தானியாவின் தெற்காசிய திணைக்களத் தலைவர், சி.வி.விக்னேஷ்வரனிடம் இதன்போது வினவியுள்ளார். சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி வாக்குப் பெற்ற தமிழ் தலைவர்கள், அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாதுள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறாவிட்டால், 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியம், ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் என்றும் சி.வி.விக்னேஷ்வரன் இதன்போது எடுத்துரைத்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவர், தனித்துவத்தைப் பேண எத்தனிப்பது சரியானது என தாம் கருதவில்லை என குறிப்பிட்டதாக சி.வி.விக்னேஷ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவைப் போன்றல்லாது, தமது நாட்டிலேயே இரண்டாம் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என முன்னாள் முதலைமைச்சர் பதிலளித்துள்ளார். உரிமைகளை அரசாங்கம் கொடுத்த பின்னர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார். தமிழ் பேசும் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்பதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை உள்ளமையை அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் சி.வி.விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.