ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாட்டு நடவடிக்கை

ஊழல் முறைகேடு: ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு

by Staff Writer 24-01-2019 | 1:12 PM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் அலுவலகம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் நிறுவப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் சிசிறகுமார ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான இந்த குழுவுக்கு மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜனி வீரவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் ஜீ. ஏ. பிரேமதிலக, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர் டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜய அமரசிங்க உள்ளிட்டோர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள், நம்பிக்கையை சீர்குலைத்தமை, சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, ஏமாற்றியமை, அதிகாரம், அரச சொத்துக்க​ள் மற்றும் சலுகைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, அரச சொத்துக்கள் மற்றும் வருமானங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தமை தொடர்பிலான உண்மைத் தன்மையை கண்டறிவதே ஆணைக்குழுவின் பிரதான நடவடிக்கை என, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்