இலங்கையில் பொருட்களைப் பரிமாறும் அமெரிக்க கடற்படை விமானங்கள்

by Staff Writer 24-01-2019 | 8:13 PM
Colombo (News 1st) அமெரிக்க கடற்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் விமானங்களுக்கிடையில் பொருட்களைப் பரிமாறும் நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதாக அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான தற்காலிகப் பொருட்கள் பரிமாற்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை வணிக செயற்பாடுகளுக்கான பிராந்திய கேந்திர நிலையமாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருகோணமலை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களிலும் டிசம்பர் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் அமெரிக்க கடற்படை விமானங்கள் இலங்கையின் வணிக விமான நிலையங்களுக்குள் பிரவேசித்து வௌியேறுவதுடன், உயிராபத்தற்ற விநியோகங்களுக்கான போக்குவரத்து இடம்பெறுகின்றது. இந்த பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்களுக்கிடையில் பரிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் USS ஜோன்ஸ் C ஸ்ட்டெனிஸ் என்ற அணுக்கப்பலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.