1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 23-01-2019 | 7:24 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறி கோரி நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. ஹட்டன் - ஸ்ட்ரதன் தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தோட்ட சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் - பொகவந்தலாவை சந்தியிலும் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹப்புத்தளை - காகொல்ல தோட்ட மக்களும் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு கோரி இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். மாத்தளை - மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்குமாறு கோரி மாத்தளை பகுதி தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுமார் 2 மணித்தியாலம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கண்டி - மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. கேகாலை - தெய்யோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். கேகாலை - கொழும்பு பிரதான வீதியில் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு கோரி யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு முன்பாகவும் சமூக நீதிக்கான அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதுளை நகரின் பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று மற்றுமொரு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. ருஹூனு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ருஹூனு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 1000 ரூபா சம்பள அதிகரிப்புக் கோரி, கொழும்பு - ஐந்துலாம்பு சந்தியில் மற்றுமொரு பேரணி நடத்தப்பட்டது. ஆயிரம் ரூபா இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் தொழிற்சங்கத்தினர், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.