ஹெரோயினுடன் கொள்ளுப்பிட்டியில் கைதானவர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 23-01-2019 | 7:06 PM
Colombo (News 1st) 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்களை இன்று கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 95 கிலோகிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்க பிரஜைகள் இருவர் அடங்குகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என விசாரணை அதிகாரிகள் இன்று மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். இதேவேளை, ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான குற்றவாளிக்கே இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் ஹெரொயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளின் போது, கலப்படமல்லாத 9.4 கிராம் ஹெரோயின் சந்தேகநபரிடமிருந்தமை தெரியவந்தது. இதன் பிரகாரம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஷஷி மகேந்திரன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.