8 விக்கெட்களால் இந்தியா வெற்றி

நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 8 விக்கெட்களால் இந்தியா வெற்றி

by Staff Writer 23-01-2019 | 8:58 PM
நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. நேப்பியரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 64 ஓட்டங்களைப் பெற்றார். மார்டின் கப்தில், கொலின் மன்ரோ, ரொஸ் டெய்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் மொஹமட் சமி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 158 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணிக்கு முதல் விக்கெட்டில் 41 ஓட்டங்க​ள் கிடைத்தது. இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, அதிக வெப்பத்தின் காரணமாக போட்டி சில நிமிடங்கள் வரை தடைப்பட்டது. இதனால் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக குறைக்கப்பட்டு இந்தியாவின் வெற்றி இலக்கு 156 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஷிகர் தவான் மற்றும் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஜோடி 91 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், விராட் கோஹ்லி 45 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஷிகர் தவான் 75 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.