அரசதுறை பணி முடக்கம்: செனட்டில் வாக்கெடுப்பு

அமெரிக்காவில் நீடிக்கும் அரசதுறை பணி முடக்கத்திற்கு தீர்வுகாண செனட்டில் வாக்கெடுப்பு

by Staff Writer 23-01-2019 | 1:54 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் நீடிக்கும் பகுதியளவிலான அரசதுறை பணிமுடக்கத்தினை நிறைவுக்குக் கொண்டுவரும் வகையில், செனட் சபையில் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. ஏறத்தாள ஒரு மாதகாலம் நீடித்த அரசதுறை பணிமுடக்கத்திற்குத் தீர்வுகாணும் வகையிலான இந்தத் தீர்மானத்தை, அமெரிக்க செனட் எடுத்துள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் முன்மொழிவுகளுக்கேற்ப, குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள செனட்டின் தலைவர் மிட்ச் மெக்கோனெல், (Mitch McConnell) இந்த வாக்கெடுப்பினை நாளைய தினம் நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துள்ளார். இதனடிப்படையில், அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கோரப்பட்டிருந்த 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்யாமல், அரசதுறைகளுக்கு 3 வாரங்களுக்கு நிதி வழங்கல் மேற்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இருப்பினும், சம்பளம் வழங்கப்படாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் அல்லது வேலையை விட்டு நீங்கியவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படக்கூடிய அறிகுறிகள் எவையும் தென்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.