ஹதுருசிங்க சம்பளத்திற்கேற்ற சேவையை வழங்கினாரா?

ஹதுருசிங்க தனது சம்பளத்திற்கேற்ற சேவையை வழங்கினாரா?

by Staff Writer 22-01-2019 | 6:02 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால செயற்பட்ட காலப் பகுதியில் இலங்கை கிரிக்கெட் பிரதான பயிற்றுநருக்கு அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவை வழங்குவதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பிலான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அது தொடர்பில் நாம் ஆராய்கின்றோம். சந்திக்க ஹதுருசிங்கவை, இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கும் உடன்படிக்கை 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளது. இதற்கமைய, அவருக்கு கிடைக்கும் மாதாந்த அடிப்படை சம்பளம் 20,000 அமெரிக்க டொலர்களாகும். அதேநேரம், வாழ்க்கை செலவு கொடுப்பனவாக மேலும் 10,000 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதுடன் 16 வீதத்தை விட வரி அதிகரிக்கும்போது அதனை கிரிக்கெட் நிறுவனமே செலுத்த வேண்டும். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை மறுசீரமைப்பது, மூலோபாய திட்டமிடல் மற்றும் ஆலோசனைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற இரண்டு அறிக்கைகளுக்காக 12,000 அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அண்மையில் கிரிக்கெட் எஜ் இணையத்தளம் செய்தி வெளியிட்டது. கொடுப்பனவு தாமதமாகின்ற சந்தர்ப்பங்களில் 2 வீத மேலதிக கொடுப்பனவை செலுத்த வேண்டும் என்பதுடன் தேசிய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையும் பயிற்றுவிப்பாளருக்கு வழங்கப்படுகிறது. பயிற்றுநரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்களாக 20,000 டொலர் சுற்றுலா கொடுப்பனவும் அவருக்கு வழங்கப்படுகிறது. இதற்கமைய, அன்னளவாக வருடாந்தம் 900 இலட்சம் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இலங்கை கிரிக்கெட் பிரதான பயிற்றுநருக்கு வழங்கப்படுவதுடன் அவரது மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு 75 இலட்சம் ரூபாவாக அமைந்துள்ளது. நாம் அண்மையில் வெளிக்கொணர்ந்த தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு மாதாந்தம் 32 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இந்தளவு பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு தலைமை பயிற்றுநராக சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அண்மைக்காலமாக ஆற்றிய சேவை என்ன? இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைசர் முஸ்தபா கிரிக்கெட் நிர்வாகசபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக நியமித்த கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் பிரதம நடவடிக்கை அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது உடன்படிக்கை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 2 வருடங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்றுக் குழு செயற்படாத நிலையிலேயே அரச அதிகாரியாக கமல் பத்மசிறிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சு செயலாளர் ஒருவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக செயற்படுகின்ற நிலையில் இவ்வாறு அவரது பதவிக் காலத்தை நீடிக்க சட்ட ரீதியில் இடமுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது யார்? முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைசர் முஸ்தபா விளையாட்டுத் துறைக்காக ஆற்றிய சேவை என்ன? பெருந்தொகை பணம் நாட்டிற்கு பயனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அந்த செலவீனங்களையும் ஈடு செய்ய வேண்டும் அல்லவா?