by Bella Dalima 22-01-2019 | 4:03 PM
2018 ஆம் ஆண்டிற்கான ICC-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோஹ்லி புதிய வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்டுதோறும் சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது. இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 3 ICC விருதுகளுக்கு தெரிவாகியுள்ளார்.
2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (சோபர்ஸ் டிராபி), சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை அவர் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் (சிறந்த வீரர், டெஸ்ட், ஒரு நாள் போட்டி) 3 ICC விருதுகளைப் பெற்ற முதல் வீரர் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார் விராட் கோஹ்லி.
மேலும் 2018 ஆம் ஆண்டின் டெஸ்ட் தலைவர் மற்றும் ஒரு நாள் போட்டித் தலைவராகவும் விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோஹ்லி கடந்த ஆண்டில் 13 டெஸ்டில் விளையாடி 1,322 ஓட்டங்களைப் பெற்றார். சராசரி 55.08 ஆகும். இதில் 5 சதம் அடங்கும். 14 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,202 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 செஞ்சுரிகள் அடங்கும். சராசரி 133.55 ஆகும். பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி 211 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டில் அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மிகவும் அபாரமாக விளையாடியதால், ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை அள்ளிச்சென்றுள்ளார்.