பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் பேச்சுவார்த்தை

by Staff Writer 22-01-2019 | 8:01 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கலந்துரையாடல் தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்களை முதலாளிமார் சம்மேளனத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலையடுத்து, அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்ததாவது,
அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவிற்கு மட்டுப்படுத்துவோம் என்றும் அதற்கு மேல் அதிகரிக்க முடியாது என்றும் தோட்ட நிர்வாகங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு பல நியாயமான காரணங்களை அவை முன்வைக்கின்றன. அவர்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில தொழிற்சங்கங்கள் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை கோருகின்றன. அது நீதியானது என நான் கருதவில்லை. இன்னும் சில தொழிற்சங்கங்கள் ஒரு நிலையை எட்டுவதற்கு விரும்பம் தெரிவித்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கிடையிலான முரண்பாடே தற்போது காணப்படுகின்றது.
இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.    

ஏனைய செய்திகள்