பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்து ஒருவர் பலி: புத்தளம் பிரதேச சபை உப தலைவர் கைது

by Staff Writer 22-01-2019 | 4:50 PM
Colombo (News 1st) புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி - வேலோசை சுகதகம கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பாரிய குழியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளுடன் தொடர்புடைய புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் ஜயம்பதி பத்திராஜா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (21) இரவு 11.30 மணியளவில் குறித்த வீதியினால் பயணித்த இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான W. நிலந்த குமார என்பவர் வீதி நிர்மாணிப்பு குழியில் வீழ்ந்து பலத்த காயமடைந்துள்ளார். புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், குறித்த வீதி நிர்மாணப்பணியுடன் தொடர்புடைய புத்தளம் பிரதேச சபையின் உப தலைவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். நிர்மாணம் மேற்கொள்ளப்படும் பகுதியில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தல் பலகைகள் ஏதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.