படைப்புழுவை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணி நியமனம்

by Staff Writer 22-01-2019 | 8:15 PM
Colombo (News 1st) யுத்தத்தை எதிர்கொள்வதற்கு ஒப்பான அர்ப்பணிப்புடன் படைப்புழுவை அழிக்க செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் காலவரையறையுடன் தேசிய செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அரச மற்றும் தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த படைப்புழு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறும் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி நாள்தோறும் கூடி படைப்புழு ஒழிப்பு நடவடிக்கைக்கான துரித தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரொருவர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதியொருவர் ஆகியோரை இந்த செயலணியில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.